- இதன் வெயிட்டிங் பீரியட் குறையும்
- இதன் உற்பத்தி முதன்முறையாக யுகேக்கு வெளியே மேற்கொள்ளப்படும்
டாடா மோட்டார்ஸின் லக்சுரி பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஃபிளாக்ஷிப் மாடல்களான ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகியவை இப்போது இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த மாடல்களின் உற்பத்தி யுகே’க்கு வெளியே நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்த நடவடிக்கையால் ரேஞ்ச் ரோவர் எஸ்யுவிகளின் விலை பெருமளவு ரூ. 56 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு. இதை தவிர, இந்த மாடல்களுக்கான வெயிட்டிங் பீரியட் கணிசமாகக் குறையும்.
உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி வேரியன்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடனும், HSE வேரியன்ட்டில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜினுடனும் கிடைக்கும். இந்த இன்ஜின் முறையே 394bhp பவர் மற்றும் 550Nm டோர்க் மற்றும் 346bhp பவர் மற்றும் 700Nm டோர்க் ஆகியவற்றை உருவாக்குகின்றன. மறுபுறம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் டைனமிக் SE வேரியன்ட்டில் வழங்கப்படும்.
இருப்பினும், ரேஞ்ச் ரோவரின் டெலிவரிகள் இப்போது தொடங்கியுள்ளன, மேலும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் டெலிவரி தொடங்குவதற்கு ஆகஸ்ட் 16, 2024 வரை காத்திருக்க வேண்டும்.
விலையைப் பொறுத்தவரை, ரேஞ்ச் ரோவர் இப்போது ரூ. 2.36 கோடியிலும், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ரூ. 1.40 கோடியிலும், ரேஞ்ச் ரோவர் வேலர் ரூ. 87.90 லட்சத்திலும், ரேஞ்ச் ரோவர் எவோக் ரூ. 67.90 லட்சத்திலும் தொடங்குகிறது (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்).
ஜே.எல்.ஆர் சீஃப் கமர்ஷியல் ஆஃபிசர் லெனார்ட் ஹர்னிக் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாக இந்தியா நிலையான மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. 'இந்த வளர்ச்சி விவேகமான இந்திய நுகர்வோருக்கு தயாரிப்புகளை உள்ளூர்மயமாக்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது' என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்