- லிட்டருக்கு 22.89 கிமீ மைலேஜ் தருவதாக மாருதி கூறுகிறது
- ஃப்ரோன்க்ஸ் ஏஎம்டீ வெர்ஷனின் விலை ரூ. 8.82 லட்சத்தில் தொடங்குகிறது
மாருதி சுஸுகி இந்தியாவில் ஃப்ரோன்க்ஸ் ஐ ஒரு வருடத்திற்கும் மேலாக விற்பனை செய்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்த கார் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பலேனோ அடிப்படையிலான இந்த கிராஸ்ஓவர் கார் தற்போது ஆறு வேரியன்ட்ஸில் ரூ. 7.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஃப்ரோன்க்ஸின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரின் ரியல்-வேர்ல்டு மைலேஜ்ஜை நாங்க இந்த ஆண்டு மார்ச் மாதம் சோதித்தோம். அந்த நேரத்தில், ஃப்ரோன்க்ஸின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் ஹைவேயில் 19.09 கிமீ மைலேஜையும், சிட்டியில் 14.25 கிமீ மைலேஜையும் கொடுத்தது. இப்போது, இந்த கிராஸ்ஓவர் ஏஎம்டீ வெர்ஷனின் ரியல்-வேர்ல்டு மைலேஜை நாங்கள் சோதித்தோம். இதை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் ஏஎம்டீ 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதுவும் டெல்டா வெர்ஷன் ரூ. 8.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த மோட்டார் 89bhp பவரையும், 113Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. அதன் மைலேஜ் எண்களுக்கு வரும்போது, மாருதி காரின் ஃப்ரோன்க்ஸ் ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ வெர்ஷன் லிட்டருக்கு 22.89 கிமீ மைலேஜை தருவதாக ஏஆர்ஏஐ கூறுகிறது.
எங்களின் சோதனைகளில், மற்ற எல்லா மாடல்களிலும் செய்யும் அதே ஸ்டாண்டர்ட் நடைமுறை சோதனையை இந்த மாடலிலும் பின்பற்றினோம். முதலில், ஏசி வெப்பநிலையை 23 டிகிரிக்கும் ஃபேன் ஸ்பீட் ஒன்று அல்லது இரண்டாக அமைக்கிறோம். மேலும், நாங்கள் சோதித்துக்கொண்டிருந்த வேரியன்ட்டில், ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் ஃபங்ஷன் இன்ஜினில் இயங்கும் இயல்புநிலைக்கு அமைக்கப்பட்டுள்ளது.
சிட்டியில் வழங்கப்படும் மைலேஜைப் பொறுத்தவரை, 6.62 லிட்டர் ஃப்யூளைப் பயன்படுத்தி 78.6 கிமீ மைலேஜை கவர் செய்தது. ஒட்டுமொத்தமாக, மல்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவில் 14 கிமீ மைலேஜைக் காட்டுகிறது, ஆனா ரியல்-வேர்ல்டு மைலேஜ் லிட்டருக்கு 11.8 கிமீ ஆகும்.
அதேபோல ஹைவேயில் ஃப்ரோன்க்ஸ் ஏஎம்டீயை ஓட்டினோம், இது 5.04 லிட்டர் ஃப்யூளை பயன்படுத்தி 91.7 கிமீ தூரத்தை எட்டியது. மல்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவில் லிட்டருக்கு 14.9 கிமீ மைலேஜை வழங்குவதாகக் காட்டினாலும், இங்கே காட்சி தலைகீழாக மாறிவிட்டது. ரியல்-வேர்ல்டு எண்களைப் பார்த்தால், இந்த கார் லிட்டருக்கு 18.1 கிமீ மைலேஜுடன் இன்னும் அதிக மைலேஜை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. இறுதியாக, ஹைவே மற்றும் சிட்டியின் ஒருங்கிணைந்த மைலேஜைப் பார்த்தால், ஃப்ரோன்க்ஸ் ஏஎம்டீ லிட்டருக்கு 13.37 கிமீ மைலேஜை வழங்கியது தெரியவந்துள்ளது. நிறுவனம் கூறியுள்ள ஃபியூல் எஃபிஷியன்சியை ஒப்பிடுகையில் இது வெறும் 58 சதவீதம் மட்டுமே.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்